மதுரையைச் சுற்றியுள்ள கிராமவாசிகளுக்கு ரொம்பவே பரிச்சயமானவர் ஹென்க் ஜேக்கப்ஸ். கடந்த 25 வருடங்களாக மதுரையையும் அதன் சுற்றுப்புறங்களையும் புகைப்படம் எடுப்பதற்காகவே வந்து கொண்டிருக்கும் பெல்ஜியம் நாட்டுக்காரர் அவர். இதனால் மதுரையைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களுக்கும், சிறு நகரங்களுக்கும் தொடர்ந்து சென்றுவருகிறார். ‘அந்திமழை’க்காக அவரைச் சந்தித்தோம். ‘வணக்கம்..நல்லா இருக்கீங்களா’ என்ற நல விசாரிப்புடன் தமிழில் நம்மை வரவேற்றார் ஹென்க். அவர் 1987ல் முதன் முதலாக தமிழகத்திற்கு வந்தாராம்.
“நான் பெல்ஜியத்திலுள்ள லோக்ரன் நகரத்தைச் சேர்ந்தவன். எனது தாய்மொழி டச்சு. அதனால் ஆங்கிலம் சுமாராகத்தான் பேசுவேன். கட்டடக்கலைப் படிப்பில் தேர்ச்சி பெற்ற போது இந்திய கட்டிடக்கலை வரலாறையும் ஆய்வு செய்தேன். இதனால் இந்தியாவிற்கு வந்தேன். டில்லியில் இருந்து தமிழகம் வந்துஇறுதியில் மதுரையில் புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன்” என்றவரிடம் ஏன் மதுரையைத் தேர்வு செய்தீர்கள்? என்ற கேள்வியை முன்வைத்தோம்.
“மதுரை தான் தமிழகத்தின் மையப் பகுதியாக இருப்பதாக நினைக்கிறேன். இங்கிருந்து தமிழகத்தின் அனைத்து இடங்களுக்கும் செல்ல பேருந்து வசதி இருக்கிறது. அதேபோல் தமிழ் கலாச்சாரமும், பண்பாடும் மதுரையில் தான் இன்றும் இருக்கிறது. சித்திரை திருவிழா, பொங்கல், தீபாவளி என எல்லாவிதமான பண்டிகைகளும், சம்பிரதாயங்களும் இங்கு இருப்பது போல் வேறு எங்கும் இல்லை. அதேநேரத்தில் இங்குள்ள மக்கள் எப்பொழுதும் சிரிப்புடன் அன்பாக பழகுகின்றனர். நான் மற்ற மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறேன். கேரளா, கர்நாடகா மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள மக்களிடம் இந்த உபசரிப்போ, புன்னகையோ எதுவும் இல்லை” என உற்சாகம் பொங்க பேசுகிறார் ஹென்க்.
“நான் இங்கே எடுத்த படங்களால் கவரப்பட்ட என் அம்மா (அப்போது 72 வயது) என்னுடன் தொடர்ந்து பத்து வருடங்கள் இந்தியாவிற்கு வந்தார். அவர் இறந்த பிறகு நான் மட்டும் தனியே வந்து செல்கிறேன். இப்போது எனக்கு 63 வயதாகிறது. நான் சிறைச்சாலையில் ஓர் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவன். பொழுதுபோக்காக தான் புகைப்படங்களை எடுத்து வருகிறேன். முன்பு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சென்று புகைப்படம் எடுப்பேன். இப்போது அது உண்மையாக நடைபெறவில்லை. கேலரிகள் அமைக்கப்பட்டு வணிகரீதியாக மாறிவிட்டது” என்னும் ஹென்க் ஜேக்கப்ஸின் தமிழ்ப்பெயர் ஒச்சப்பன் என்பதாகும்.
“நான் மதுரைக்கு வந்த போது லோடுமேனாக பணிபுரியும் ஒச்சப்பன் என்பவர்தான் எனக்கு உதவிகள் செய்தார். இதனால் அவரது பெயரையே வைத்துக்கொண்டேன். அவர் ஏழு வருடங்கள் கூடவே இருந்தார். பிறகு ஆனந்த் என்பவர் இப்போது எனக்கு உதவியாக இருக்கிறார்“
தமிழகத்திற்கு நவம்பர் முதல் பிப்ரவரி வரை ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்கள் வந்து செல்கிறார் இவர். தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் அதிக ஈடுபாடும் நேசிப்பும் கொண்ட ஹென்க், உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ் புழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவதாக வேதனைப்படுகிறார். இவரது புகைப்படங்கள் அனைத்தும் வண்ணங்களால் பளிச்சிடுகின்றன. “மக்களின் சந்தோஷத்தை இந்த வண்ணங்கள்தான் பிரதிபலிக்கின்றன” என்கிறார் அவர். மதுரையின் பெரிய சாலை ஒன்றில் நீளமாக தன் படங்களைக் காட்சிக்கு வைக்க வேண்டும் என்பதே ஹென்க் ஜேக்கப்ஸ் என்கிற ஒச்சப்பனின் ஆசை.
(இவரது புகைப்படங்களை http://www.flickr.com/photos/oochappan/என்ற முகவரியில் காணலாம்).
பிப்ரவரி, 2013.